Sunday, October 11, 2020

கொல கொலயா முந்திரிக்கா

 குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளில் எல்லோரும் பிடித்தமான விளையாட்டு இதுவாகும். நண்பர்களுடன் மட்டுமின்றி, இந்த விளையாட்டினை குடும்பத்தினருடனும் விளையாடிய அனுபவம் பலருக்கும்  உண்டு. பெரும்பாலும் உறவினர்கள் வீட்டிற்கு வரும் நாட்களில், இரவு நேரங்களில் மொட்டை மாடியிலும், தெருக்களிலும் இந்த விளையாட்டை விளையாடுவது சுகம்.

தேவையான பொருட்கள்

கைக்குட்டை அல்லது சிறிய துண்டு

தேவையான நபர்கள்

இது ஒரு குழு விளையாட்டு. எனவே குறைந்தபட்சம் 8 பேர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். அதிகபேர் விளையாடினால் தான் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

விளையாடும் முறை

முதலில் அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும். அதில் யாரேனும் ஒருவர் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அந்த நபர், ஒரு கையில் கைக்குட்டையை எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தி கையை சுழற்றியவாறே, வட்டமாக அமர்ந்திருக்கும் அனைவரையும் வட்டத்திற்கு வெளியே சுற்றி வருவர். அவ்வாறு சுற்றி வரும் போது, சுற்றிவருபவர் உரக்க பாடல் பாடுவர். சுற்றி வருபவர் ஒரு வரி பாட, வட்டத்தில் அமர்ந்திருப்பவர்கள் அடுத்தவரியை உரக்க பாடுவர்.

சுற்றிவருபவர்                : கொல கொலயா முந்திரிக்கா…..

அமர்ந்திருப்பவர்கள்   :  நரிய நரிய சுத்தி வா….

சுற்றிவருபவர்                : கொல்லை அடிச்சவன் எங்கிருக்கான்….

அமர்ந்திருப்பவர்கள்   : கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி….



இவ்வாறு பாடிக்கொண்டே ஒருமுறையோ, இருமுறையோ வட்டத்தை சுற்றி சுற்றி வருவர். பாடல் முடிந்ததும் அமர்ந்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர்மேல் தான் கையில் சுற்றிக் கொண்டிருக்கும் கைக்குட்டையை போட்டுவிட்டு வட்டத்தை சுற்றி ஓடுவர்.

பின்னர் அந்த நபர் எழுந்து, கையில் கைக்குட்டையை பிடித்தவாறு, தன் மேல் கைக்குட்டையை போட்ட அந்த நபரை துரத்தி பிடிக்க வேண்டும். அவ்வாறு துரத்தி பிடித்துவிட்டால் அவரே வெற்றி பெற்றவராவார். எனவே அவர் தன்னுடைய பழைய இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம். மாறாக,  துரத்தி பிடிப்பதற்குள், ஓடும் நபர் வட்டத்தை சுற்றி வந்து, வட்டத்தில் காலியாக உள்ள இடத்தில் உட்கார்ந்து கொண்டால், இவர் வெற்றிபெற்றதாக அர்த்தம். எனவே, துரத்தி வரும் நபர் மீண்டும் ஆட்டத்தை தொடர வேண்டும்.

அவரும் அதேபோல் பாடல் பாடி வலம் வந்து யார் மேலாவது கைக்குட்டையை போட வேண்டும். இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

விளையாட்டின் நன்மைகள்

·         குழந்தைகளுக்கு குழுவாக விளையாடும் திறன் வளரும்.

·         ஓடி விளையாடுவது உடலுக்கு நல்லது.

·         பாட்டு பாடி மகிழ்வர்.

 

 

 

திருடன்போலிஸ்

திருடன்போலிஸ்… இதனை ராஐா ராணி விளையாட்டு எனவும் கூறுவர். எங்கள் பள்ளிக்கூட பருவத்தில் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. எங்கள் வீட்டுப்பாட நோட்டுகள் சீக்கிரம் தீர்ந்து போனதற்கு இந்த விளையாட்டும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

ஓடாமல் ஆடாமல் உட்கார்ந்தவாறே விளையாட இந்த விளையாட்டு எங்களுக்கு போதுமானதாக இருந்தது. வீட்டுத்திண்ணை, தெருக்கள், மரத்தடி என எல்லா இடங்களையும் இந்த விளையாட்டுக்கான மைதானமாக பயன்படுத்தினோம். பல நேரங்களில் பள்ளிகளில் படிப்பதுபோல் குழுவாக அமர்ந்து திருடன்போலிஸ் விளையாட்டு விளையாடியுள்ளோம். எங்கள் எல்லோர் நோட்டுகளில் இந்த விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்கள் இருக்கும். தீர்ந்துபோன பழைய நோட்டுகளில் கூட அந்த பக்கங்கள் இன்றும் அழகாக தெரிகின்றன.

திருடன்போலிஸ் (அ) ராஐா ராணி

தேவையான பொருட்கள்

வெள்ளை காகிதம், பேனா, ஒரு நோட்டு

நபர்களின் எண்ணிக்கை

ஐந்து நபர்கள்

விளையாடும் நேரம்

காலவரையற்றது.

முன்னேற்பாடுகள்

முதலில் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அதனை சமஅளவில் ஐந்து செவ்வக வடிக சிறிய சீட்டுகளாக கிழித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு சீட்டிலும் முறையே ராஐா, ராணி, மந்திரி, போலிஸ், திருடன் என எழுத வேண்டும். மேலும் அவர்களுக்கான மதிப்பெண்களையும் அதில் எழுத வேண்டும்.


உதாரணமாக,

·         ராஐாக்கு அதிக மதிப்பெண்கள் 10000 மதிப்பெண்களும்,

·         ராணிக்கு அதை விட குறைவாக 5000 மதிப்பெண்களும்,

·         மந்திரிக்கு அதை விட குறைவாக 1000 மதிப்பெண்களும்,

·         போலிஸுக்கு 500 மதிப்பெண்களும்,

·         திருடனுக்கு 0 மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும்.

பின்னர் அந்த ஐந்து சீட்டுகளையும் தனிதனியாக மடிக்க வேண்டும். மடிக்கப்பட்ட சீட்டுகள் ஐந்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் மடிக்க வேண்டும்.

இதனிடையில் நோட்டுபுத்தகத்தில் விளையாடுவதற்கான மதிப்பெண் அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அந்த அட்டவணையில் விளையாடும் நபர்களின் பெயர்களை தனிதனியாக எழுதி, அதன் கீழே மதிப்பெண்களை எழுதும் வண்ணம் கட்டம் போட வேண்டும். அதில் மதிப்பெண் நிரப்பும் பொறுப்பை ஐவருள் ஒருவர் ஏற்க வேண்டும்.



விளையாடும் முறை

ஐவரும் வட்டமாக அமர்ந்து, ஐவருள் ஒருவர் மடக்கப்பட்ட சீட்டுகளை குலுக்கி நடுவில் போடுவார. பின்னர் ஆளுக்கெரு சீட்டு எடுத்துக் கொள்ளவர். அனைவரும் அவரவர்களுக்கு வந்த சீட்டுகளை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ராஐா, ராணி, மந்திரி என சீட்டு வந்தவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பர். அதில் போலிஸ் என எழுதிய சீட்டு வந்தவர் மீதமுள்ள நால்வருள் யார் திருடன் என கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ராஐா, ராணி, மந்திரி சீட்டு வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர், ஆனால் திருடன் என சீட்டு வந்தவர்கள் தான் திருடன் இல்லை என்பதை காட்டிக் கொள்ளும் வண்ணம் பல வித முகபாவனைகள் செய்து தானும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வர். பல நேரங்களில் அதுவே அவரை திருடன் என காட்டிக் கொடுத்துவிடும்.

போலிஸ் திருடன் யார்? என சரியாக அடையாளம் காட்டி விட்டால் சீட்டில் குறிப்பிட்டிருக்கும்படி, போலிஸூக்கு 500 மதிப்பெண்களும், திருடனுக்கு 0 மதிப்பெண்களும் சேரும். மாறாக, போலிஸ் தவறாக திருடனை கண்டுபிடித்தால், அடுத்த கணம் திருடன் என்னும் சீட்டினை உடையவர் “திருடன் மலையேறிவிட்டான்” என உரக்க சொல்ல வேண்டும். பின்னர் போலிஸூக்கு 0 மதிப்பெண்களும், திருடனுக்கு 500 மதிப்பெண்களும் சேரும்.

இவ்வாறு ஒரு ஆட்டம் முடிவடைந்தவுடன் நோட்டுபுத்தகத்தில் உள்ள அட்டவணையில் ராஐா, ராணி, மந்திரிக்கு அவர்களான முழு மதிப்பெண்களையும், திருடன் மற்றும் போலிஸூக்கு ஆட்டத்தை பொறுத்து மதிப்பெண்களையும் பதிவிடுவர். இவ்வாறு குறைந்தபட்சம் பத்து ஆட்டங்களாவது ஆடிய பின்னர் அவரவர் பெற்ற மதிப்பெண்களை மொத்தமாக கூட்டி, முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், மூன்றாம் மதிப்பெண் என மதிப்பிட்டு மகிழ்வர்.

விளையாட்டின் நன்மைகள்

·         கணிதத்திறன்(கூட்டல்) மேம்படும்.

·         குழந்தைகளுக்கு குழுவாக விளையாடும் திறன் வளரும்.

·         முகபாவனை வைத்து மனநிலையை அறிய முயல்வர்.

 

 

 

 

 

 

 

Tuesday, October 6, 2020

தட்டாங்கல்


விளையாட்டு. இது வெறும் வார்த்தை அல்ல வரலாறு. அந்த காலங்களில்(1990களில்) விளையாட்டு என்பது உடலினை வலிமைப் படுத்துவதாகவும், மனதளவில் குழந்தைகளை மகிழ்விப்பதாகவும் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்கள் அவர்களை மனதளவிலும் உடலளவிலும் வலிமைப்படுத்துவதாக அமைவதில்லை என்பது என்னுடைய கருத்து. அன்று எங்களுக்கு கையில் கிடைத்த எல்லாவற்றையும் விளையாட்டுப் பொருளாக மாற்றினோம். எந்த ஒரு பொருளும் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நட்பையும், நல்ல நினைவுகளையும் கொண்ட நாட்கள் அவை. வேர்வை சொட்ட சொட்ட விளையாடிய அந்த நாட்கள் அற்புதமானவை. இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கியிக்கும் குழந்தைகளுக்கு மறக்கப்பட்ட நம் விளையாட்டுக்களை நினைப்படுத்தவே இந்த பதிவு.

தட்டாங்கல்

தட்டாங்கல் ஆட்டம் கிராமப்புறங்களில் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும். இது ஒரே மாதிரியான உருண்டையான கற்களைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு ஆகும். தட்டிப்பிடித்து விளையாடுவதால் இதனை தட்டாங்கல் என்பர். சங்க காலத்தில் இதனை தெற்றி என குறிப்பிட்டுள்ளனர். பழங்காலம் முதலே இந்த விளையாட்டு விளையாடப்பட்டதற்கான சான்றுகளை நாம் சில நூல்களின் வழி அறியலாம். பிள்ளைத்தமிழில் குறிப்பிடப்படும் பெண்குழந்தைகளுக்கான பத்து பருவங்களில்(காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், கழங்கு/அம்மானை, ஊசல்) கழங்கு/அம்மானை எனப்படும் பருவம் சிறுமியர் மரம் அல்லது ஈயத்தாலான பந்து போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எரிந்து கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு ஆகும். இது கழங்கு காய்களைக் கொண்டும் ஆடப்படுவதால் கழங்காடுதல் எனவும் கூறப்பட்டது. பெரும்பாலும் இந்த விளையாட்டு பேதை மற்றும் பெதும்மை வயதினரால் விளையாடப்படுவதாக பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகின்றது.

இந்த விளையாட்டு வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இதனை பாண்டிக்கல் என்றும் சிலர் கூறுவர். விளையாடப் பயன்படுத்தப்படும் கற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐந்தாங்கல், ஏழாங்கல், பத்தாங்கல் என்றும் கூறுவர்.

பெரும்பாலும் பாடல் பாடிக்கொண்டே சிறுமியர் இந்த விளையாட்டை விளையாடுவர்.

ஐந்தாங்கல்:

தேவையான பொருட்கள்

ஒரே மாதிரியான உருண்டையான ஐந்து சிறுகற்கள்(அ)கூழாங்கற்கள்

நபர்களின் எண்ணிக்கை

இரண்டு பேர் விளையாடலாம் அல்லது குழுவாக விளையாடலாம்

விளையாடும் முறை

முதலில் ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களை முறையே ஒன்னான், இரண்டான், மூணான், நாலான் என்ற முறைப்படி எடுக்கவேண்டும். இவ்வாறு கற்களை எடுக்கும்போது கைவிரல் மற்ற கற்களில் மீது படாதவாறு எடுக்கவேண்டும், பிற கற்களை அசைக்காமல் எடுக்கவேண்டும். மாறாக விரல் பட்டாலோ, பிறகற்கள் அசைந்தாலோ விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

1. ஒன்னான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களில் ஒவ்வொரு கல்லாக எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

2. இரண்டான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களை இரண்டு இரண்டு கல்லாக எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

3. மூணான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களில் முதலில் ஒரு கல்லை எடுத்துவிட்டு, பின்னர் மீதமுள்ள மூன்று கற்களையும் எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

4. நாலான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற நான்கு கற்களையும் ஒருசேர எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

பின்பு ஐந்து கற்களையும் தூக்கிப்போட்டு, அதனை புறங்கையில் தாங்கி பிடிக்கவேண்டும். அவற்றுள் எதிர் ஆட்டக்காரர் ஏதேனும் ஒரு கல்லை பிடிக்க சொல்லவேண்டும். பின்னர் எல்லா கற்களையும் மேலே தூக்கிப் போட்டு எதிர் ஆட்டக்காரர் சொன்னக் கல்லை மட்டும் சரியாக பிடிக்க வேண்டும். இவ்வாறு பிடித்துவிட்டால் அவர் பழம் பெற்றவராவார்.

நன்மைகள்

  • தட்டாங்கல் விளையாட்டின் மூலம் குழந்தைகளின் கைகளும், கை நரம்புகளும் வலுபெறுகிறது.
  • குழந்தைகளுக்கு குழுவாக விளையாடும் திறன் வளரும்.
  • தன்னம்பிக்கை மேம்படும்.

 

 

கொல கொலயா முந்திரிக்கா

  குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளில் எல்லோரும் பிடித்தமான விளையாட்டு இதுவாகும். நண்பர்களுடன் மட்டுமின்றி, இந்த விளையாட்டினை குடும்பத்தி...