Tuesday, October 6, 2020

தட்டாங்கல்


விளையாட்டு. இது வெறும் வார்த்தை அல்ல வரலாறு. அந்த காலங்களில்(1990களில்) விளையாட்டு என்பது உடலினை வலிமைப் படுத்துவதாகவும், மனதளவில் குழந்தைகளை மகிழ்விப்பதாகவும் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்கள் அவர்களை மனதளவிலும் உடலளவிலும் வலிமைப்படுத்துவதாக அமைவதில்லை என்பது என்னுடைய கருத்து. அன்று எங்களுக்கு கையில் கிடைத்த எல்லாவற்றையும் விளையாட்டுப் பொருளாக மாற்றினோம். எந்த ஒரு பொருளும் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நட்பையும், நல்ல நினைவுகளையும் கொண்ட நாட்கள் அவை. வேர்வை சொட்ட சொட்ட விளையாடிய அந்த நாட்கள் அற்புதமானவை. இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கியிக்கும் குழந்தைகளுக்கு மறக்கப்பட்ட நம் விளையாட்டுக்களை நினைப்படுத்தவே இந்த பதிவு.

தட்டாங்கல்

தட்டாங்கல் ஆட்டம் கிராமப்புறங்களில் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும். இது ஒரே மாதிரியான உருண்டையான கற்களைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு ஆகும். தட்டிப்பிடித்து விளையாடுவதால் இதனை தட்டாங்கல் என்பர். சங்க காலத்தில் இதனை தெற்றி என குறிப்பிட்டுள்ளனர். பழங்காலம் முதலே இந்த விளையாட்டு விளையாடப்பட்டதற்கான சான்றுகளை நாம் சில நூல்களின் வழி அறியலாம். பிள்ளைத்தமிழில் குறிப்பிடப்படும் பெண்குழந்தைகளுக்கான பத்து பருவங்களில்(காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், கழங்கு/அம்மானை, ஊசல்) கழங்கு/அம்மானை எனப்படும் பருவம் சிறுமியர் மரம் அல்லது ஈயத்தாலான பந்து போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எரிந்து கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு ஆகும். இது கழங்கு காய்களைக் கொண்டும் ஆடப்படுவதால் கழங்காடுதல் எனவும் கூறப்பட்டது. பெரும்பாலும் இந்த விளையாட்டு பேதை மற்றும் பெதும்மை வயதினரால் விளையாடப்படுவதாக பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகின்றது.

இந்த விளையாட்டு வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இதனை பாண்டிக்கல் என்றும் சிலர் கூறுவர். விளையாடப் பயன்படுத்தப்படும் கற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐந்தாங்கல், ஏழாங்கல், பத்தாங்கல் என்றும் கூறுவர்.

பெரும்பாலும் பாடல் பாடிக்கொண்டே சிறுமியர் இந்த விளையாட்டை விளையாடுவர்.

ஐந்தாங்கல்:

தேவையான பொருட்கள்

ஒரே மாதிரியான உருண்டையான ஐந்து சிறுகற்கள்(அ)கூழாங்கற்கள்

நபர்களின் எண்ணிக்கை

இரண்டு பேர் விளையாடலாம் அல்லது குழுவாக விளையாடலாம்

விளையாடும் முறை

முதலில் ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களை முறையே ஒன்னான், இரண்டான், மூணான், நாலான் என்ற முறைப்படி எடுக்கவேண்டும். இவ்வாறு கற்களை எடுக்கும்போது கைவிரல் மற்ற கற்களில் மீது படாதவாறு எடுக்கவேண்டும், பிற கற்களை அசைக்காமல் எடுக்கவேண்டும். மாறாக விரல் பட்டாலோ, பிறகற்கள் அசைந்தாலோ விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

1. ஒன்னான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களில் ஒவ்வொரு கல்லாக எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

2. இரண்டான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களை இரண்டு இரண்டு கல்லாக எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

3. மூணான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற கற்களில் முதலில் ஒரு கல்லை எடுத்துவிட்டு, பின்னர் மீதமுள்ள மூன்று கற்களையும் எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

4. நாலான்

ஐந்து கற்களையும் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அந்தக் கல் கீழே வருவதற்குள் கீழே இருக்கின்ற நான்கு கற்களையும் ஒருசேர எடுக்கவேண்டும். அதே சமயம் மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். 

பின்பு ஐந்து கற்களையும் தூக்கிப்போட்டு, அதனை புறங்கையில் தாங்கி பிடிக்கவேண்டும். அவற்றுள் எதிர் ஆட்டக்காரர் ஏதேனும் ஒரு கல்லை பிடிக்க சொல்லவேண்டும். பின்னர் எல்லா கற்களையும் மேலே தூக்கிப் போட்டு எதிர் ஆட்டக்காரர் சொன்னக் கல்லை மட்டும் சரியாக பிடிக்க வேண்டும். இவ்வாறு பிடித்துவிட்டால் அவர் பழம் பெற்றவராவார்.

நன்மைகள்

  • தட்டாங்கல் விளையாட்டின் மூலம் குழந்தைகளின் கைகளும், கை நரம்புகளும் வலுபெறுகிறது.
  • குழந்தைகளுக்கு குழுவாக விளையாடும் திறன் வளரும்.
  • தன்னம்பிக்கை மேம்படும்.

 

 

1 comment:

கொல கொலயா முந்திரிக்கா

  குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளில் எல்லோரும் பிடித்தமான விளையாட்டு இதுவாகும். நண்பர்களுடன் மட்டுமின்றி, இந்த விளையாட்டினை குடும்பத்தி...