Sunday, October 11, 2020

திருடன்போலிஸ்

திருடன்போலிஸ்… இதனை ராஐா ராணி விளையாட்டு எனவும் கூறுவர். எங்கள் பள்ளிக்கூட பருவத்தில் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. எங்கள் வீட்டுப்பாட நோட்டுகள் சீக்கிரம் தீர்ந்து போனதற்கு இந்த விளையாட்டும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

ஓடாமல் ஆடாமல் உட்கார்ந்தவாறே விளையாட இந்த விளையாட்டு எங்களுக்கு போதுமானதாக இருந்தது. வீட்டுத்திண்ணை, தெருக்கள், மரத்தடி என எல்லா இடங்களையும் இந்த விளையாட்டுக்கான மைதானமாக பயன்படுத்தினோம். பல நேரங்களில் பள்ளிகளில் படிப்பதுபோல் குழுவாக அமர்ந்து திருடன்போலிஸ் விளையாட்டு விளையாடியுள்ளோம். எங்கள் எல்லோர் நோட்டுகளில் இந்த விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்கள் இருக்கும். தீர்ந்துபோன பழைய நோட்டுகளில் கூட அந்த பக்கங்கள் இன்றும் அழகாக தெரிகின்றன.

திருடன்போலிஸ் (அ) ராஐா ராணி

தேவையான பொருட்கள்

வெள்ளை காகிதம், பேனா, ஒரு நோட்டு

நபர்களின் எண்ணிக்கை

ஐந்து நபர்கள்

விளையாடும் நேரம்

காலவரையற்றது.

முன்னேற்பாடுகள்

முதலில் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அதனை சமஅளவில் ஐந்து செவ்வக வடிக சிறிய சீட்டுகளாக கிழித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு சீட்டிலும் முறையே ராஐா, ராணி, மந்திரி, போலிஸ், திருடன் என எழுத வேண்டும். மேலும் அவர்களுக்கான மதிப்பெண்களையும் அதில் எழுத வேண்டும்.


உதாரணமாக,

·         ராஐாக்கு அதிக மதிப்பெண்கள் 10000 மதிப்பெண்களும்,

·         ராணிக்கு அதை விட குறைவாக 5000 மதிப்பெண்களும்,

·         மந்திரிக்கு அதை விட குறைவாக 1000 மதிப்பெண்களும்,

·         போலிஸுக்கு 500 மதிப்பெண்களும்,

·         திருடனுக்கு 0 மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும்.

பின்னர் அந்த ஐந்து சீட்டுகளையும் தனிதனியாக மடிக்க வேண்டும். மடிக்கப்பட்ட சீட்டுகள் ஐந்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் மடிக்க வேண்டும்.

இதனிடையில் நோட்டுபுத்தகத்தில் விளையாடுவதற்கான மதிப்பெண் அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அந்த அட்டவணையில் விளையாடும் நபர்களின் பெயர்களை தனிதனியாக எழுதி, அதன் கீழே மதிப்பெண்களை எழுதும் வண்ணம் கட்டம் போட வேண்டும். அதில் மதிப்பெண் நிரப்பும் பொறுப்பை ஐவருள் ஒருவர் ஏற்க வேண்டும்.



விளையாடும் முறை

ஐவரும் வட்டமாக அமர்ந்து, ஐவருள் ஒருவர் மடக்கப்பட்ட சீட்டுகளை குலுக்கி நடுவில் போடுவார. பின்னர் ஆளுக்கெரு சீட்டு எடுத்துக் கொள்ளவர். அனைவரும் அவரவர்களுக்கு வந்த சீட்டுகளை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ராஐா, ராணி, மந்திரி என சீட்டு வந்தவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பர். அதில் போலிஸ் என எழுதிய சீட்டு வந்தவர் மீதமுள்ள நால்வருள் யார் திருடன் என கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ராஐா, ராணி, மந்திரி சீட்டு வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர், ஆனால் திருடன் என சீட்டு வந்தவர்கள் தான் திருடன் இல்லை என்பதை காட்டிக் கொள்ளும் வண்ணம் பல வித முகபாவனைகள் செய்து தானும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வர். பல நேரங்களில் அதுவே அவரை திருடன் என காட்டிக் கொடுத்துவிடும்.

போலிஸ் திருடன் யார்? என சரியாக அடையாளம் காட்டி விட்டால் சீட்டில் குறிப்பிட்டிருக்கும்படி, போலிஸூக்கு 500 மதிப்பெண்களும், திருடனுக்கு 0 மதிப்பெண்களும் சேரும். மாறாக, போலிஸ் தவறாக திருடனை கண்டுபிடித்தால், அடுத்த கணம் திருடன் என்னும் சீட்டினை உடையவர் “திருடன் மலையேறிவிட்டான்” என உரக்க சொல்ல வேண்டும். பின்னர் போலிஸூக்கு 0 மதிப்பெண்களும், திருடனுக்கு 500 மதிப்பெண்களும் சேரும்.

இவ்வாறு ஒரு ஆட்டம் முடிவடைந்தவுடன் நோட்டுபுத்தகத்தில் உள்ள அட்டவணையில் ராஐா, ராணி, மந்திரிக்கு அவர்களான முழு மதிப்பெண்களையும், திருடன் மற்றும் போலிஸூக்கு ஆட்டத்தை பொறுத்து மதிப்பெண்களையும் பதிவிடுவர். இவ்வாறு குறைந்தபட்சம் பத்து ஆட்டங்களாவது ஆடிய பின்னர் அவரவர் பெற்ற மதிப்பெண்களை மொத்தமாக கூட்டி, முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், மூன்றாம் மதிப்பெண் என மதிப்பிட்டு மகிழ்வர்.

விளையாட்டின் நன்மைகள்

·         கணிதத்திறன்(கூட்டல்) மேம்படும்.

·         குழந்தைகளுக்கு குழுவாக விளையாடும் திறன் வளரும்.

·         முகபாவனை வைத்து மனநிலையை அறிய முயல்வர்.

 

 

 

 

 

 

 

4 comments:

  1. Ithula innoru sheet kuta vachikalam athu சிப்பாய் naaga athigama iruntha சிப்பாய் sethukuvom...

    ReplyDelete
  2. ஆமாம், அப்படியும் விளையாடலாம்.

    ReplyDelete
  3. தாங்களிடம் இன்னும் அதிகமான செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. முயற்சிக்கிறேன்...

      Delete

கொல கொலயா முந்திரிக்கா

  குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளில் எல்லோரும் பிடித்தமான விளையாட்டு இதுவாகும். நண்பர்களுடன் மட்டுமின்றி, இந்த விளையாட்டினை குடும்பத்தி...